நலன் விரும்பிகள்

கல்லூரியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவோர்


பாடசாலை அபிவிருத்திச் சங்கம்(S.D.S)

அதிபரை பதவி வழித் தலைவராகவும், செயலாளராக திரு. க.சண்முகநாதனும் பொருளாளராக திருமதி. சு.சஞ்சீவ் ஆகியோர் செயற்படுகின்றனர். பாடசாலையின் அபிவிருத்திக்கு பெற்றோர், ஆசிரியர், பழையமாணவர், நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்றி வருகின்றனர்.

தொலைபேசி, மின்சாரம், விளையாட்டுத்துறை, பாடசாலை வள சிறுதிருத்தங்கள், போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றும் மாணவர்களின் போக்குவரத்து மற்றும் இதரசெலவுகளுக்கு நிதி பங்களிப்பு வழங்கி கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றது.

இச்சங்கத்திற்கு பெற்றோரது பங்களிப்பு மிகவும் வேண்டப்படும் வேளையில் எமது பாடசாலையைப் பொறுத்த வரையில் மிகக் குறைவாகவே உள்ளது. தமது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் அக்கறை கொண்டோர், பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் சிலர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்று பாடசாலையோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றோர்கள் எல்லோரையும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்துவத்தைப் பெற்று பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பழையமாணவர்சங்கம் (O.S.A)


அதிபர் தலைமையிலான கல்லூரியின் செயற்பாடுகளுக்கு இச்சங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. இதன் செயலாளராக திரு.S.சண்முகவடிவேல் அவர்களும் பொருளாளராக திரு.S.சுந்தரலிங்கம் அவர்களும் செயலாற்றி வருகின்றனர். கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா என்பவற்றுக்கு இச்சங்கம் நிதியுதவி வழங்கி வருகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் சிலர் இச்சங்கத்தினூடாக கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் நிகழ்வுகளுக்கு தமது அன்பளிப்பை வழங்கி வருகின்றனர். ஆசிரிய தினத்தின் போது இச்சங்கம் ஆசிரியர்களை வாழ்த்திக் கௌரவித்து வருகின்றது. கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் கல்லூரியின் வளர்ச்சிக்கு இச்சங்கமானது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றது.

எமது கல்லூரியின் பழைய மாணவரான திரு.க.தர்மலிங்கம் (J.P) அவர்கள் எமது பாடசாலையின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை உயர்த்துமுகமாக இவ்வருட ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மதிப்பீட்டுப் பரீட்சையில் உயர்ந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதற்காக நிதியுதவி வழங்கியுள்ளார். க.பொ.த.(உ/த) 2006ம் ஆண்டு அணியைச் சேர்ந்த கல்லூரியின் பழைய மாணவர்களும் தற்போது அவுஸ்திரேலியாவிலுள்ள செல்வி. டர்சிகா ஆனந்தநடராசா மற்றும் செல்வன். கந்தையா கிரிசாந்தன் ஆகியோர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கும் க.பொ.த(சா/த) பரீட்சையில் உயர் சித்திபெறும் மாணவருக்கும் பண அன்பளிப்பை மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்தும் முகமாக வழங்கியுள்ளார்கள்.

அமரர். நீ.சி.முருகேசு அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவர்கள் எமது பாடசாலையில் க.பொ.த.(உ/த) பரீட்சையில் உயர்சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வசதி குறைந்த ஒரு மாணவருக்கு பணப்பரிசினை வழங்கியுள்ளார்கள். பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் இத்தகைய ஊக்குவிப்புக்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஊக்குவிப்பாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.

இச்சங்கத்தில் மேலும் பல பழைய மாணவர்கள் இணைவதன் மூலம் சங்கம் பலம் பெறுவதுடன் சங்கத்தின் செயற்பாடுகளும் கல்லூரியின் வளர்ச்சிக்குஉறுதுணையாக அமையும். நூற்றாண்டை நோக்கி நகர்ந்து செல்கின்ற எமது கல்லூரி மேலும் உயர்வடைய பழைய மாணவா் சங்கத்தின் அர்ப்பணிப்பான சேவையை நாடி நிற்பதுடன் இதுவரை ஆற்றிய பணிகளுக்காக அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் – U.K.


இங்குள்ள பழைய மாணவர் சங்கத்திற்கு உற்சாகமூட்டக்கூடிய வகையில் ஐக்கிய இராச்சியத்திலும் ஓர் பழைய மாணவர் சங்கம் உதயமாகியிருப்பது எமக்குப் பெருமை தருகின்றது. ஸ்தாபகரின் உறவு முறையான திரு.மா.திருவாசகமும் ஏனைய கல்லூரிப் பழைய மாணவர்களும் கிராமப் பற்றாளர்களும் ஒன்று சேர்ந்து இச்சங்கத்தை உருவாக்கிப் பவள விழாவையும் கொண்டாடியமை பாராட்டுக்குரியதாகும்.

கல்லூரியின் கல்வி வளர்ச்சியிலும் பௌதிக வள விருத்தியிலும் அக்கறையுடன் செயற்படும் இச்சங்கம் கல்லூரி நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதுடன் கல்லூரியின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வருகின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தொடர்ந்து இக்கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு தவணையும் நிதியுதவியினை வழங்கி வருகின்றது.

எமது கல்லூரியின் பழைய அதிபர் அலுவலகத்தினை அதன் கட்டடக்கலை அமைப்பு மாறாத வகையில் நவீன முறையில் பல இலட்சம் ரூபாய்கள் செலவில் புனரமைப்புச் செய்வதற்குரிய ஆயத்த நடவடிக்கையில் இச்சங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இச்சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் திரு.பொ.சிவசுப்பிரமணியம் அவர்கள் ஒவ்வொரு வருடமும் எமது கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு தனது சொத்துப்பணத்தில் நிதி அன்பளிப்பை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

இச்சங்கத்தின் உபதலைவரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு.பொ.சிவதாசன் அவர்கள் ஒவ்வொரு தரத்திலும் முதன்மை நிலைபெறும் மாணவர்களுக்கு தனது தந்தையார் அமரர். பொன்னுத்துரை ஞாபகார்த்தமாக ஆண்டு தோறும் பரிசில்கள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

இச்சங்கத்தின் பொருளாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு.செ.சுபேஸ்குமார் அவர்கள் மூன்று தவணைகளிலும் பொதுத்திறமைச் சான்றிதழ் (General Proficiency) பெறும் மாணவர்களுக்கு தனது தந்தையார் அமரர். தம்பிமுத்து செல்வரத்தினம் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் பரிசில்கள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

இவ்வருடம் பரிசளிப்பு விழா செலவிற்காக நிதிப் பற்றாக்குறையாக இருந்ததினால் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான இச்சங்கத்தின் தலைவர் திரு.ம.திருவாசகம் அவர்களும் செயலாளர் திரு.செ.செல்வநாதன் அவர்களும் தமது சொந்தப்பணத்தில் நிதியுதவியினை வழங்கி பரிசளிப்புவிழா சிறப்பாக நடைபெற உதவியுள்ளார்கள்.

இச்சங்கமானது வருடாவருடம் நடாத்திவரும் கலைமாலைப் பொழுது நிகழ்வும் “கலைமாலை” சஞ்சிகை வெளியீடும் 10வது ஆண்டு விழாவாக 06.10.2012 அன்று இலண்டன் மாநகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்மூலம் கல்லூரியின் புகழ் உலகெங்கும் பரவுவதுடன் கல்லூரி மீதுபுலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்களின் தொடர்பும் அக்கறையும் மேலோங்கும். எனவே, இவ்வாறான நல்ல சேவைகளைச் செய்துவரும் இச்சங்கத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இதன் பணிகள் மேலும் சிறப்படைய வாழ்த்துகின்றேன்.

 

நீர்வேலி நலன்புரிச் சங்கம் -கனடா


நீர்வேலிக் கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் மிகவும் அக்கறையுடன் செயற்படும் இச்சங்கமானது கல்வி நிறுவனங்களினதும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வருகின்றது. இச்செயற்பாடுகளினால் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். எமது கல்லூரி இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டிக்கு ரூபாய். 25,000.00 யும் பரிசளிப்பு விழாவுக்கு ரூபாய்.40,000.00 ஐயும் வழங்கி இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவியுள்ளது.

மேலும் வசதியற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நிதியுதவிகளை செய்து வருகின்றார்கள். இதன் மூலம் இவ் உதவிகளைப் பெறும் மாணவர்கள் தமது கல்வியின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் கல்வி நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு முன்னேற்றம் அடைகின்றார்கள்.

இவ்வாறாக கல்வி நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிலைகளில் உதவிவரும் இச்சங்கத்தையும் அதன் அங்கத்தவர்களையும் மனமார பாராட்டுவதுன் எனது நன்றியையும் தெரிவித்து இச்சங்கத்தின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் விரிவடைந்து எமது கிராமத்தின் கல்வி, சமூக, பொருளாதார நிலை மேலும் உயர்வடைய இறைவனை வேண்டுகின்றேன்.

நீர்வேலி நற்பணிச் சங்கம் -சுவிற்சலாந்து


இச்சங்கம் நீர்வேலி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது. அந்தவகையில், எமது கல்லூரியின் தற்காலிக காவலாளிக்கான வேதனக் கொடுப்பனவாக ரூபாய். 2,000.00 மாதாந்தம் வழங்கி வருவதுடன் ஒவ்வொரு தவணையும் கல்வியில் ஆர்வமுள்ள வசதிகுறைந்த மாணவர்களுக்கு நிதியுதவித் தொகையையும் வழங்கி வருகின்றது. மேலும்,எமது சதுரங்கக் கழகத்துக்கு ரூபாய்.10,000.00 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்கியது. இவ் உபகரணங்களை பயன்படுத்தி எமது மாணவர்கள் இவ்விளையாட்டில் போதிய பயிற்சிகளில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்கள்.

மாணவர்களின் பொது அறிவினை மேம்படுத்தும் முகமாக வருடா வருடம் அமரர். வேதவல்லி கந்தையா ஞாபகார்த்தமாக நீர்வேலி அணியப் பாடசாலை மாணவர்களுக்கு பொது அறிவுப்போட்டி நடாத்தி பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வருகின்றார்கள்.

இவ்வாறாக இந்த நீர்வேலிக் கிராமத்து மாணவர்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்காக இச்சங்கத்தையும், அதன் அங்கத்தவர்களையும் பாராட்டுவதுடன் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.